உத்திர பிரதேசத்தில் நடந்த 183 என்கவுன்டர்களை விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
உத்திர பிரதேசத்தில் நடந்த 183 என்கவுன்டர்களை விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அதிக் அகமது. சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இவர் மீது 100-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும்.
அந்த வழக்கில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத், அவருடைய கூட்டாளி குலாம் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர். தலைமறைவான அவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜான்சி நகரில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டரில் ஆசாத்தும், குலாமும் கொல்லப்பட்டனர். அவர்கள் உடல்கள் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டன. அடுத்த சில மணி நேரங்களில், ஆதிக் அகமதுவும், அவருடைய சகோதரர் அஷ்ரப்பும் பிரயாக்ராஜ் சிறையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். வழியில் அவர்கள் பேட்டி அளித்தனர்.
அப்போது, பத்திரிகையாளர்களுடன் கலந்திருந்த 3 மர்ம நபர்கள், அவர்களை மிக அருகில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். கைவிலங்கு போடப்பட்டிருந்த இருவரும் கீழே விழுந்தனர். அதன்பிறகும் அவர்கள் சுட்டனர். இதில், ஆதிக் அகமதுவும், அஷ்ரப்பும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் 6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகளை என்கவுன்டர்களில் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், இதில் தாதாவும், அரசியல்வாதியுமான ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவனது கூட்டாளியும் அடங்குவதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உ.பி. சிறப்பு டிஜிபி கூறியது போல், 2017 முதல் நடந்த 183 என்கவுண்டர்கள் குறித்து விசாரிக்க முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்கக் கோரி விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.