சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது
சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மும்பை,
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இதன் வெளிப்பகுதியில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை சுட்டு கொல்ல மற்றொரு சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மராட்டியத்தின் பன்வெல் நகரில், சல்மான் கானின் காரை தாக்க திட்டமிடப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜானி வால்மிகி என்ற நபருக்கும் இந்த சதி திட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிவானி பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஜானி வால்மிகியை இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.