கேரளாவில் புரோட்டோ சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி பலி
கேரளாவில் புரோட்டா சாப்பிட்ட மாணவி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிஜூ கேப்ரியல். இவருடைய மகள் நயன் மரியா (வயது 16). இவர் அங்குள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார்.
நயன் மரியாவுக்கு மைதா மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவு பொருட்களைச் சாப்பிடும் போதெல்லாம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றதை தொடர்ந்து மைதா மற்றும் கோதுமை பொருட்களை சாப்பிடும்போது உடலில் ஏற்பட்டு வந்த அலர்ஜி சற்று குறைந்துள்ளது.
இதனால் நயன் மரியா கடந்த சில காலமாக அதிகப்படியான மைதாவால் செய்யப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட தொடங்கியுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவும் புரோட்டா சாப்பிட்டுள்ளார். மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும், அவரது உடலில் சில மோசமான அறிகுறிகளும் தெரியத்தொடங்கின.
அதைதொடர்ந்து அவர் இடுக்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் நயன் மரியா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து இடுக்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.