9 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி...!
பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அதன்பிறகு 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
பஞ்சாப் எல்லையில்தான் 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது அங்கு இந்திய ராணுவ வீரர்கள் பலர் தங்களது உயிரை தியாகம் செய்து இந்தியாவிற்கு அந்த போரில் வெற்றியை தேடி தந்தனர்.
அதன் 50-ம் ஆண்டு நினைவையொட்டித்தான் பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லைக்கு சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 3 முக்கிய நினைவிடங்களுக்கு சென்று நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2016-ம் ஆண்டு இமாச்சல பிரதேச எல்லையிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது அவர் இந்தோ-திபெத் எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களையும், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டோரா ஸ்கவுட்ஸ் எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
அதையடுத்து 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர்(வடக்கு) எல்லையிலும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள ஹர்சில் பகுதியிலும் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அப்போது அவர் அங்குள்ள புகழ்பெற்ற வழிபாட்டு தலமான கேதர்நாத்துக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதையடுத்து 2019-ம் ஆண்டு மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராஜவுரி பகுதியிலும், 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் உள்ள லாங்க்வாலா பகுதியிலும், 2021-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள நவுசேரா பகுதியிலும் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.