குஜராத்தில் ரூ.7,300 கோடி முதலீட்டில் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி நிலையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
காந்திநகர்,
இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரியானாவிற்கான மாருதி சுஸுகி வாகன உற்பத்தி நிலையம் மற்றும் குஜராத்தில் சுசுகி இவி பேட்டரி ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மாருதி-சுசுகியின் வெற்றியானது வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையைக் குறிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
இந்த நட்பைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் நிச்சயமாக நமது நண்பரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ஷின்சோ அபேயை நினைவு கூர்வார்கள்.
எங்களின் முயற்சிகள் ஜப்பானுக்கு எப்போதும் மரியாதையும் அளித்தன. அதனால்தான் சுமார் 125 ஜப்பானிய நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன. வழங்கல், தேவை மற்றும் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதன் மூலம், மின்சார வாகன துறை நிச்சயமாக முன்னேறப் போகிறது.
மின்சார வாகனங்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அவை அமைதியாக இருப்பது. 2 சக்கர வண்டிகளோ, 4 சக்கர வண்டிகளோ எதுவாக இருந்தாலும் மின்சார வாகனங்கள் சத்தம் போடுவதில்லை.இந்த மவுனம் அதன் பொறியியலைப் பற்றியது மட்டுமல்ல, நாட்டில் ஒரு மவுனப் புரட்சியின் தொடக்கமும் கூட.
இவ்வாறு அவர் பேசினார்.
அரியானா மாநிலம் கர்கோடாவில் உள்ள வாகன உற்பத்தி நிலையம் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.11,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.
ரூ.7,300 கோடி முதலீட்டில் குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.இதற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் மோடி நாட்டினார்.