காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தக்காளி, இஞ்சி
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அங்கு ஒரு கூடையில் தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
பேட்டியில் சுப்ரியா ஸ்ரீநேட் கூறியதாவது:-
விலைவாசி உயர்வால், இந்த காய்கறிகளின் மதிப்பு ரூ.1,070. இதையே ஒரு பரிசாக கொடுக்கலாம். தக்காளி விலை கிலோ ரூ.160 ஆகவும், இஞ்சி விலை ரூ.400 ஆகவும், பச்சை மிளகாய் விலை ரூ.400 ஆகவும் உயர்ந்து விட்டது. துவரம் பருப்பு, கோதுமை, அரிசி, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இப்படி விலைவாசி இருந்தால், நடுத்தர மக்களும், ஏழைகளும் எப்படி வாழ்வது?
டீசல் விலை
விலைவாசியை குறைக்க மோடி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏழைகள் மீது அரசுக்கு அக்கறை இல்லையா?
அதுபோல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 டாலராக குறைந்து விட்டது. இருந்தாலும், அந்த பலனை பொதுமக்களுக்கு வழங்க மோடி அரசு தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும்.
உடனடி நடவடிக்கை
எனவே, விலைவாசியை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். வரிகள் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுவதை நிறுத்த வேண்டும்.
பருவநிலை காரணமாக காய்கறிகள் விலை உயர்வதாக மத்திய அரசு சாக்குபோக்கு சொல்வதை ஏற்க முடியாது. ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை முன்னுதாரணமாக கொண்டு, விலைவாசியை குறைக்க வேண்டும்.
பிஸ்கட், டீ தூள், சாக்லேட் ஆகிய அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. பாக்கெட்டில் அதே விலையாக இருந்தபோதிலும், அளவை குறைத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.