பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், உண்மையான சுதந்திரம் இல்லாமல் இருக்கும் மணிப்பூரின் அவல நிலையைப் பற்றி சிந்திப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று, டெல்லியில் வசிக்கும் மணிப்பூர் மக்களின் ஒரு குழுவை நான் சந்தித்தேன், அவர்கள் மணிப்பூரில் மோதல்கள் தொடங்கியதிலிருந்து, தங்கள் இதயத்தை உடைக்கும் போராட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்திருப்பதன் வலி மற்றும் மோதல்களால் தங்கள் சமூகங்களில் ஏற்பட்ட உடல் மற்றும் மன வலிகளைப் பற்றி அவர்கள் பேசினர். மணிப்பூரில் உள்ள நமது சகோதர சகோதரிகள் சகித்துக்கொண்டிருக்கும் கடுமையான யதார்த்தம், ஒரு நீடித்த பயத்தின் நிலை.
நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் உண்மையான சுதந்திரம் இல்லாமல் இருக்கும் மணிப்பூரின் அவல நிலையைப் பற்றி சிந்திப்போம். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று, அங்கு விரைவில் அமைதி திரும்புவதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.