கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் தொடக்க விழா; பிரதமர் மோடி 25-ந்தேதி கர்நாடகம் வருகை


கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் தொடக்க விழா; பிரதமர் மோடி 25-ந்தேதி கர்நாடகம் வருகை
x

கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி பெங்களூரு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெங்களூரு:

வேட்பாளர்களின் பெயர்கள்

கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மூன்று கட்சிகளும் யாத்திரை பெயரில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். ஜனதா தளம்(எஸ்) 93 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரசும் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.

இந்த சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார். அவர் இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை, தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார்.

மருத்துவ கல்லூரி

இந்த நிலையில் பிரதமர் மோடி 7-வது முறையாக வருகிற 25-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் காலையில் தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு செல்லும் அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூரு வரும் அவர், இங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதன் பிறகு அவர் அங்கிருந்து சிவமொக்காவுக்கு ஹெலிகாப்டரில் சென்று பிறகு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனேகமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இதுவே அவரது கடைசி கர்நாடக பயணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜனதா பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனி மெஜாரிட்டி

கர்நாடக சட்டசபையில் எப்படியாவது தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கு பிரதமர் மோடிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு கை கொடுக்கும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.


Related Tags :
Next Story