நாடாளுமன்றத்தில் அரசின் செயல் திட்டம் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்றத்தில் அரசின் செயல் திட்டம் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதற்கு முதலீட்டாளர்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி தங்களது செயல்திட்டங்களை இன்று நிறைவேற்றுவது பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று, மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டம் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி மற்றும் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன.