பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை 13-ந்தேதி நடக்கிறது
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை 13-ந்தேதி நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக்கின் துறை சார்ந்த வல்லுனர்களுடன் பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான விவாதங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு மத்திய மந்திரிகளும் பங்கேற்பார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.