யோகாவை போல, சிறு தானியங்களையும் எம்.பி.க்கள் ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு சிறு தானிய விருந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று சிறப்பு சிறுதானிய விருந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் கம்பு, சாமை மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டன.

சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று மதிய உணவு நேரத்தில் கம்பு, சாமை, மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்ட விருந்து நடைபெற்றது. 2023 ஆம் வருடம் சிறுதானியங்கள் ஆண்டு என சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

உலகிலேயே சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் போன்ற நிகழ்ச்சிகளில் கூட ஆரோக்கியம் அளிக்கும் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தியாவின் தொடர் முயற்சியால் ஐநா 2023 வருடத்தை உலக சிறுதானியங்கள் வருடமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசும் போது, யோகாவைப் போல், சிறு தானியங்களை எம்.பி.க்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் தினை உணவுகள் பரிமாறப்பட்ட ஆடம்பரமான மதிய உணவில் அனைவரும் கலந்துகொண்டோம். கட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட பங்கேற்பைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story