குஜராத்: "இயற்கை வேளாண்மை மாநாடு" - பிரதமர் மோடி இன்று உரை
சூரத்தில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
குஜராத், சூரத்தில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "குஜராத் பஞ்சாயத்து சம்மேளனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, சூரத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதன் பயனாக மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூரத்தில் இன்று நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வழியாக உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் இயற்கை விவசாயத்திற்கு மாறிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில், குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்யா தேவவ்ரதாந்த், முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.