4 மாநிலங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி


4 மாநிலங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 July 2023 2:08 AM IST (Updated: 5 July 2023 6:21 AM IST)
t-max-icont-min-icon

ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 7ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி முதலில் டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்குச் செல்கிறார், அங்கு அவர் ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஆறு வழித்தடம் உட்பட பல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிப்பார். அதன்பின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் கோரக்பூருக்குச் செல்லும் பிரதமர் அங்கு கீதா அச்சகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அதன்பிறகு, அவர் மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார். மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவார்.

கோரக்பூரில் இருந்து தனது தொகுதியான வாரணாசிக்கு செல்லும் மோடி, அங்கு பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசியில், பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு முதல் சோன் நகர் வரையிலான புதிய பகுதியை பிரதமர் திறந்து வைக்கிறார்.

ஜூலை 8ஆம் தேதி அவர் வாரணாசியில் இருந்து தெலுங்கானா மாநிலம் வாரங்கலுக்கு பயணம் மேற்கொள்கிறார். வாரங்கலில், நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் முக்கிய பகுதிகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.


Next Story