மகளிர் தினத்தன்று பி.எம்.டி.சி. பஸ்களில் 22 லட்சம் பெண்கள் இலவச பயணம்
மகளிர் தினத்தன்று பி.எம்.டி.சி. பஸ்களில் 22 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்தனர்.
பெங்களூரு:
உலக மகளிர் தினம் 2 தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. மருத்துவம் உள்பட பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது நிறுவனங்கள் சார்பில் பெண்களுக்கு என தனியே விளையாட்டு போட்டிகள், நிகழ்ச்சிகள் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி பி.எம்.டி.சி. பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்றைய நாள் ஒட்டுமொத்தமாக 21.97 லட்சம் பெண்கள், பி.எம்.டி.சி. பஸ்களில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மகளிர் தினத்தை முன்னிட்டு பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அன்றைய நாள் 21.97 லட்சம் பெண்கள் பி.எம்.டி.சி. பஸ்களில் பயணித்துள்ளனர். 19 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 2.97 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் மேற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 5¼ லட்சம் பேர் பயணம் பெய்துள்ளனர். அதனை தொடர்ந்து வடக்கு மண்டலத்தில் 4¾ லட்சம் பேர் பயணித்து இருந்தனர். இதனால் பி.எம்.டி.சி.க்கு ரூ.8¼ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.