குஜராத்தில் விஷ சாராயத்திற்கு பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு; 50 பேருக்கு சிகிச்சை
குஜராத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது. 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கடந்த திங்கட் கிழமை காலை சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தன என முதல்கட்ட தகவல் வெளியானது. 30க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக நேற்று அதிகரித்தது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கடந்த 12 மணிநேரத்தில் பொடாட் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்து உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்து உள்ளார். விஷ சாராயம் விற்றதற்காக இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
குஜராத்தின் பவ்நகர், பொடாட் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் 50 பேர் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் நேற்று 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.