கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
கேரளாவில் கடனை திருப்பி கேட்ட போது நண்பரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரளா:
பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே புளிக்கீழ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவரது நண்பர் பொடியாடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (40). தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ், சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்துக்கு வட்டி கொடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் சந்தோஷ் குமார் அசல் பணத்தை திருப்பி கேட்ட போது, அதனை கொடுக்காமல் ராஜேஷ் இழுத்தடித்து வந்தார்.
இதனால் 2 பேருக்கு இடையே கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ஓணம் பண்டிகை முடிந்து மறுநாள் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ராஜேஷ் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் பணத்தை வாங்க சந்தோஷ் குமார், ராஜேஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது ராஜேஷ் தற்போது பணத்தை தர முடியாது என கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதையடுத்து சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேசை தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ராஜேசை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நண்பரை அரிவாளால் வெட்டிய சந்தோஷ்குமாரை புளிக்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவல்லா முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.