போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்
கசபாபேட்டையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை பணியிடமாற்றம் செய்து நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை இரவு கசபாபேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட துர்கத்பைல் பகுதியில் சிவா நாயக் என்ற ரவுடிக்கும், சந்தோஷ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிவாநாயக், சந்தோசை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கசபாபேட்டை போலீசார் சிவாநாயக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சந்தோஷின் உறவினர்கள் 'போலீசாரின் ஒத்துழைப்புடன் தான் கொலை நடந்துள்ளது. இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறி போராட்டம் நடத்தினர். மேலும் உப்பள்ளி கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரப்பிலும் நகர போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதாவது 'கொலைக்கு உடந்தையாக போலீசார் செயல்பட்டுள்ளனர். எனவே இ்ன்ஸ்பெக்டர் அடேகப்பாவை பணியிடமாற்றம் செய்யவேண்டும்' என்று கோரிக்ைக வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் துறை ரீதியாக விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று இன்ஸ்பெக்டர் அடேகப்பாவை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராகவேந்திரா, கசபாபேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.