போலீஸ் மோப்ப நாய் துர்கா மரணம்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்


போலீஸ் மோப்ப நாய் துர்கா மரணம்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
x

தாவணகெரேயில் போலீஸ் மோப்ப நாய் துர்கா மரணம் அடைந்தது. அதனை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்தனர்.

சிக்கமகளூரு;


தாவணகெரே போலீசில் துர்கா என்ற பெண் மோப்ப நாய் வளர்க்கப்பட்டு வந்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பு துலக்க இந்த நாய் போலீசாருக்கு உதவி வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவணகெரே போலீசாருக்கு உதவியாக இந்த நாய் இருந்து வந்தது.

இந்த நாய் 'லேடி சிங்கம்' என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் துர்கா நாய் பாதிக்கப்பட்டது. இதனால் கால்நடை மருத்துவர்கள் துர்கா நாய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த வாரம் நாய்க்கு ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அதில் துர்கா நாய்க்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்கா நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து துர்கா நாய்க்கு தாவணகெரேயில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் கலந்துகொண்டு, நாய்க்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் துர்கா நாய் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த துர்கா நாய் 71 கொலை வழக்குகளிலும், 35 திருட்டு வழக்குகளில் துப்பு துலக்கி உள்ளது. ஒரு வழக்கில் துர்கா நாய், 13 கிலோ மீட்டர் தூரம் வரை மோப்பம் பிடித்து நடந்து சென்றே குற்றவாளியை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.


Next Story