போலீஸ் பணியை கடமையாக பார்க்காமல் சேவையாக நினைத்து செயல்பட வேண்டும்
போலீஸ் பணியை கடமையாக பார்க்காமல் சேவையாக நினைத்து செயல்பட வேண்டும் என்று பெண் போலீசாருக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்திரகுப்தா அறிவுரை வழங்கினார்.
சிக்கமகளூரு:-
வழியனுப்பு விழா
கர்நாடகத்தில் போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு சிக்கமகளூரு ராமனஹள்ளியில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து பயிற்சி நடந்தது. கடந்த ஓராண்டு காலமாக பெண் போலீசாருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பயிற்சி முடிந்து அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சிக்கமகளூரு போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடந்தது.
இதில், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்திரகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பெண் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர்கள் ஏற்று கொண்டனர்.
சேவையாக நினைத்து...
இதையடுத்து பயிற்சி முடிந்த பெண் போலீசார் மத்தியில் போலீஸ் ஐ.ஜி. சந்திரகுப்தா பேசியதாவது:-
ஓராண்டு காலம் போலீஸ் பயிற்சி பெற்ற நீங்கள், திறம்பட செயல்பட வேண்டும். எந்தவித தயக்கமும், பயமும் இன்றி உறுதியான முடிவை துணிச்சலாக எடுக்க வேண்டும். போலீஸ் பணியை கடமையாக பார்க்காமல் சேவையாக பார்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் திறமையாக செயல்பட்டு நல்ல பதவியை அடைய வேண்டும். தினமும் புதிய, புதிய விஷயங்களை கற்றுகொள்ள வேண்டும். புதிய இடங்களுக்கு செல்வதால் பயப்பட கூடாது. எங்கு என்றாலும் அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றி கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.