அரசியல் கட்சி தலைவா்கள் தொடர் பிரசாரத்தால்
அரசியல் கட்சிகளின் தலைவர்களின் தொடர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி, கார்கே, தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
பெங்களூரு:-
ராகுல் காந்தி
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவா்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களின் தீவிரமான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விஜயாப்புரா, பீதர், ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அமித்ஷா-மல்லிகார்ஜுன கார்கே
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் சாம்ராஜ்நகர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று பாகல்கோட்டையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அவர் பேசும்போது, காங்கிரசை கடுமையாக குறை கூறினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், வன்முறை, ஊழல் அதிகரித்து விடும் என்றும், குடும்ப அரசியல் தீவிரமாக தலைதூக்கும் என்றும் பேசினார்.
அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று மங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜனதா அரசை கடுமையாக தாக்கி பேசினார். இந்த ஆட்சியில் ரூ.1½ லட்சம் கோடி கோடி கொள்ளையடித்து இருப்பதாகவும், அதனை தேர்தலில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அனல் பறக்கும்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உப்பள்ளி-தார்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பெலகாவியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மைசூரு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர். பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நேற்று பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் வீடு வீடாக சென்று பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். கட்சிகளின் வேட்பாளர்களும் தொண்டர்களுடன் ஊர் ஊராக, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவேகவுடா-குமாரசாமி
அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா நேற்று முன்தினம் முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் துமகூரு மாவட்டம் சிரா, மதுகிரி, கொரட்டகெரே தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். நேற்று அவர் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா, கே.ஆர்.நகர் தொகுதிகளில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினார்.
மேலும் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். நேற்று காலை அவர் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவர் மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் தேர்தல் தொடர்பாக அந்த தொகுதி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று (புதன்கிழமை) மைசூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இன்று தலைவர்கள் பிரசாரம்
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். இங்கு அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு வரும் அவர், அங்கிருந்து மண்டியாவுக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார். அதன் பிறகு அவர் மைசூருவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு செல்கிறார். விஜயாப்புராவுக்கு சென்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் லக்னோ புறப்பட்டு செல்கிறார்.
ராஜ்நாத்சிங்-நிர்மலா சீதாராமன்
அதேபோல் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் இன்று கர்நாடகம் வந்து பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் பெலகாவி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் இன்று கர்நாடகம் வந்து கலபுரகி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதால் கர்நாடக தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள தேசிய தலைவர்கள் வரத்தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்திற்கு வரவுள்ளதால், சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.