பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு எதிராக போஸ்டர்ஒட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
சித்ரதுர்காவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத பா.ஜனதா எம்.எல்.ஏ.விற்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு-
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள எம்.கே.ஹட்டி என்ற இடத்தில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் கிடந்ததாக கூறப்படுகிறது. முறையான குடிநீர் வசதிகள் இல்லை. மேலும் பாலம் ஒன்றின் அடியில் தேங்கிய நீர், அங்கிருந்து வெளியேற்றப்படாமல் கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான திப்பாரெட்டி என்பவரை சந்தித்து, அடிப்படை வசதிகள் மற்றும் மழை நீர் வெளியேறுவதற்கு, வடிகால் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு திப்பாரெட்டி, அந்த கிராம மக்களை அவமதித்ததாக கூறப்படுகிறது. மேலும் எந்த அடிப்படை வசதிகளையும் அவர் செய்து கொடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், திப்பா ரெட்டி எம்.எல்.ஏ.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டினர். அதில் அவரை அவமதிக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது பா.ஜனதாவினரையும், திப்பாரெட்டி எம்.எல்.ஏ.வையும் கோபமடைய செய்தது. இதையடுத்து அவர்கள் இது குறித்து சித்ரதுர்கா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுவரொட்டிகளை ஒட்டியவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.