மினி விதானசவுதா திறக்கப்படுவது ஒத்திவைப்பு
கோலார் தங்கவயலில் தொடர் மழையால் மினி விதானசவுதா திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கோலார் தங்கவயல்:
மினி விதானசவுதா
கோலார் மாவட்டம் தங்கவயல் தாலுகா ராபர்ட்சன் பேட்டை அம்பேத்கர் நகரில் ரூ.10 கோடி செலவில் தாலுகா நிர்வாக அலுவலகமான மினி விதானசவுதா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் 21-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கோரமண்டல் டோல்கேட் முதல் ஐந்து விளக்கு, உரிகம் ரெயில் நிலையம், ராபர்ட்சன் பேட்டை வரை ரூ.10 கோடி செலவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக கோலார் தங்கவயலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் 21-ந் தேதி மினி விதானசவுதா திறக்கும் விழா கைவிடப்பட்டது.
27-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
இந்து நிலையில் நேற்று கோலார் தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் மினிவிதானசவுதா திறப்பு விழா குறித்து வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 27-ந் தேதி மினி விதானசவுதாவை திறக்க நேரில் வருவதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார். அதனால், வருகிற 27-ந் தேதி மினி விதானசவுதா திறக்கப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கூறினார்.