மின்துறை தனியார் மயமாக்கம்: புதுச்சேரியில் தீவிரமடையும் போராட்டம் - எதிர்க்கட்சி தலைவர் உட்பட 500 பேர் கைது


மின்துறை தனியார் மயமாக்கம்: புதுச்சேரியில் தீவிரமடையும் போராட்டம் - எதிர்க்கட்சி தலைவர் உட்பட 500 பேர் கைது
x

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தது.

இந்தநிலையில் மின்சார வினியோகத்தை 100 சதவீதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை சமீபத்தில் புதுச்சேரி அரசு அதிரடியாக வெளியிட்டது. இந்த அறிவிப்பு மின்வாரிய ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். கடந்த 28-ம் தேதி கலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் தொடங்கினர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்த இன்று 4-வது நாளாக நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட மின்வாரி ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story