போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனை விற்ற 5 பேர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
பெங்களூரு: பெங்களூரு வித்யரண்யபுரா பகுதியில் வசித்து வருபவர் கிரி. டாக்டரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகோபால், ஜெயலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான எலகங்காவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி இருந்தார். இந்த நிலையில் அந்த நிலத்தை பாஸ்கர் என்பவருக்கும் சிலர் விற்று இருந்தனர். இதுபற்றி தெரியவந்ததும் கிரியின் உறவினர் ரஞ்சித் என்பவர் வித்யரண்யபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது கிரிக்கு விற்பனை செய்த நிலம் போலி ஆவணங்கள் தயாரித்து விற்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து வித்யரண்யபுராவை சேர்ந்த வேணுகோபால், கவுரம்மா, ராஜாஜிநகரை சேர்ந்த சங்கர், பிரகாஷ், சாந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வேணுகோபாலும், கவுரம்மாவும் தங்களது பெயரை மாற்றி போலியாக ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றது தெரியவந்தது.