ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி முடிந்து இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி முடிந்து இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
புதுடெல்லி,
உலக நாடுகளின் பார்வையை கடந்த 12 நாட்களாக தன்பக்கம் ஈர்த்திருந்தது, இங்கிலாந்து.
அந்த நாட்டின் நீண்ட கால ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 70 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96), கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார்.
பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு, இங்கிலாந்து மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) மன்னர் ஆனார்.
ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த 14-ந் தேதி மாலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டன.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மட்டுமின்றி தங்கள் நெஞ்சங்களிலும் பல்லாண்டுகளாக ராணியாக வீற்றிருந்த தங்கள் மகாராணிக்குலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 4 நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய நாட்டு மக்களின் பற்றுறுதி அரச குடும்பத்தினரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என சுமார் 500 தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
ராணி எலிசபெத் உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. 10 லட்சம் பேர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தநிலையில் ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றிந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.