மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு இருக்கை ஒதுக்கீடு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்


மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு இருக்கை ஒதுக்கீடு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்
x

கோப்புப்படம்

ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு, பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்காமல் அவதிப்பு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு, அவரது பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்காமல் அவதிப்பு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், 'ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் தரவரிசை மற்றும் முன்னுரிமை அட்டவணைப்படி உள்துறை அமைச்சகம் இருக்கைகளை ஒதுக்கியது. இதில் 7-வது நிலையில் வரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு 3-வது வரிசையில்தான் இருக்கை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் முன் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது' என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, 'அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நான் மூலையில் இருப்பதை கவனித்த ஒரு ஊழியர், அவரை (கார்கே) நடுப்பகுதிக்கு மாறி அமருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதை அவர் மறுத்து விட்டார். இது எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது' என்று தெரிவித்தார்.


Next Story