கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு "ரோடு ஷோ" நடத்திய பிரதமர் மோடி


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி பெலகாவியில் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு "ரோடு ஷோ" நடத்தினார். வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரு:

பிரதமரின் "ரோடு ஷோ"

பிரதமர் மோடி நேற்று சிவமொக்காவில் புதிய விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். அங்கு மேலும் ரூ.3,600 கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பகல் 2 மணியளவில் அவர் விமானத்தில் பெலகாவிக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு சாம்ரா விமான நிலையத்தில் இருந்து அவர் தனி ஹெலிகாப்டர் மூலம் பெலகாவி கர்நாடக ஆயுதப்படை மைதானத்திற்கு சென்றார். அங்கு கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிளில் இருந்து திறந்த காரில் மோடி "ரோடு ஷோ" நடத்தினார். சம்பாஜி சர்க்கிள், கிர்லோஸ்கர் ரோடு, சனி பகவான் கோவில், கபிலேஸ்வர் கோவில் ரோடு, சிவாஜி கார்டன், பழைய பி.பி. ரோடு வழியாக மாலினி நகரை பிரதமரின் "ரோடு ஷோ" அடைந்தது.

பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு

10.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு விழா நடைபெறும் தூரம் வரை மோடி காரில் கதவை திறந்து அதை பிடித்தப்படி சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி வந்தார். வழிநெடுகிலும் மக்கள் அவர் மீது பூக்களை தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

மோடி பூ மழையில் நனைந்தார். அவரது காரின் முன்பகுதி மற்றும் மேல் பகுதி பூக்களால் மறைக்கப்பட்டது. இந்த "ரோடு ஷோ" மூலம் அவர் பெலகாவி மக்களின் ஆதரவை திரட்டினார். இந்த "ரோடு ஷோ" மதியம் 2.45 மணிக்கு தொடங்கி மாலை 4.20 மணிக்கு நிறைவடைந்தது. அதாவது இந்த "ரோடு ஷோ" 1.35 மணி நேரம் நடைபெற்றது.

பா.ஜனதா தொண்டர்கள்

இந்த 1½ மணி நேரமும் இடைவெளி இன்றி மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி கையசைத்தப்படி வந்தார். அவரது காரை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி நடந்து வந்தனர். சாலையின் இருமருங்கிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தடுப்புகளை தாண்டி பா.ஜனதா தொண்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். வழிநெடுகிலும் தொண்டர்கள் மோடி வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அவர் இங்கு வருகை தரும்போது எல்லாம் தவறாமல் "ரோடு ஷோ" நடத்துகிறார். இதன் மூலம் அவர் மக்களின் ஆதரவு திரட்டுவதுடன் பா.ஜனதா பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.


Related Tags :
Next Story