போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த வெற்றி தினம் ஆயுதப்படைகளுக்கு நாடு கடன்பட்டுள்ளது பிரதமர் மோடி புகழாரம்


போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த வெற்றி தினம் ஆயுதப்படைகளுக்கு நாடு கடன்பட்டுள்ளது பிரதமர் மோடி புகழாரம்
x

1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த வெற்றி தினத்தையொட்டி, ஆயுதப்படைகளுக்கு நாடு கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 1971-ம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அதே ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி, தனது தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அதன்மூலம் வங்காளதேசம் என்ற புதிய நாடு உருவானது.

அதனால், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ந்தேதி 'விஜய் திவாஸ்' என்ற வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

கடன்பட்டுள்ளது

இதையொட்டி, பிரதமர் மோடி, ஆயுதப்படைகளுக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தனது 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

விஜய் திவாசையொட்டி, 1971-ம் ஆண்டு போரில், இந்தியா அபரிமிதமான வெற்றி பெறுவதை உறுதி செய்த துணிச்சலான ஆயுதப்படை வீரர்கள் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

நாட்டை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றிய ஆயுதப்படைகளுக்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராஜ்நாத்சிங்

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கும் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய ஆயுதப்படைகளின் அபரிமிதமான துணிச்சல், தியாகம் ஆகியவற்றுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது. 1971-ம் ஆண்டு போர் என்பது அரக்கத்தனத்தை மனிதத்தன்மையும், அநீதியை நீதியும், மோசமான நடத்தையை நல்ல நடத்தையும் வெற்றி கொண்டதன் அடையாளம்.

இந்தியா தனது ஆயுதப்படைகள் குறித்து பெருமைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆயுதப்படையின் சேவை மற்றும் தியாகத்துக்கு நாடு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


Next Story