பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகிறார்
பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
பெங்களூரு:
பிரதமர் மோடி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அவர் இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் 7-வது முறையாக நாளை (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் பிரதமர் மோடி, முதலில் சிக்பள்ளாப்பூருக்கு சென்று அங்கு மருத்துவ அறிவியல் கல்லூரியை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் பெங்களூரு வரும் அவர், கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
நிறைவு விழாவில் பிரதமர் மோடி
பின்னர் இங்கிருந்து தாவணகெரேவுக்கு செல்லும் மோடி, அங்கு பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதை முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா செல்லும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இதை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.
மத்திய மந்திரிகள்
4 குழுக்களாக பிரிந்து நான்கு திசையில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை மூலம் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சட்டசபை தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு மத்திய-மாநில அரசுகளின் சாதனைகள் எடுத்து கூறி வருகிறார்கள். இந்த யாத்திரைகளில் பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.