குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
x

குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

வதோதரா,

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தருணத்தில், அந்த மாநிலத்தில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான 'சி-295' ரக போர் விமானங்களை (போக்குவரத்து விமானங்களை) தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.21 ஆயிரத்து 935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் விமானங்களை ஐரோப்பாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இங்கு தயாரிக்கப்படுகிற போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்படுவதோடு ஏற்றுமதியும் செய்யப்படும். ஐரோப்பாவுக்கு வெளியே இந்த 'சி-295' விமானம் தயாரிக்கப்படப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

"உலகின் உற்பத்தி மையமாக உருவாகும் இலக்கை நோக்கி ஒரு பெரிய நடவடிக்கையை இன்றைக்கு நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்தியா போர் விமானங்களையும், டாங்கிகளையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும், மருந்துகளையும், தடுப்பூசிகளையும், மின்னணு சாதனங்களையும், செல்போன்களையும், கார்களையும் தயாரிக்கின்றன. அவை பல நாடுகளில் பிரபலமாக உள்ளன.

'இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்' என்ற தாரக மந்திரத்துடன் முன்னோக்கி நடைபோடுகிறோம். தற்போது இந்தியா உலகின் மாபெரும் போக்குவரத்து விமான உற்பத்தியாளராகி வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமைமிக்க வார்த்தைகளுடன் இந்தியா மிகப்பெரிய பயணிகள் விமானங்களை தயாரிக்கும்,

இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விமான துறையை மாற்றியமைக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது. இந்திய பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முதலீடு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இங்கு தயாரிக்கப்படுகிற போக்குவரத்து விமானங்கள் நமது பாதுகாப்பு படைகளுக்கு வலிமையைத் தருவதோடு மட்டுமல்லாமல், விமான தயாரிப்பில் புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் உதவும். கலாசார மையமாக, கல்வி மையமாக திகழ்கிற புகழ் பெற்ற வதோதரா, விமானத்துறை மையமாக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும்.

இந்த தொழிற்சாலைக்கு எதிர்காலத்தில் பிற நாடுகளிடம் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் 'இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம்' என்ற உறுதிமொழி, இந்த மண்ணுக்கு ஒரு பெரிய உந்துதலைப்பெற்றுத்தரும்.

விமான போக்குவரத்தில் உலகின் 3 முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் நுழையப்போகிறோம். இந்தியாவுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கை நோக்கி இந்த ஆலையை நிறுவ அடிக்கல் நாட்டி இருப்பது ஒரு முக்கிய படி ஆகும். இதற்கான ஆயத்தங்களை ஏற்கனவே இந்தியா தொடங்கி விட்டது.

கடந்த 8 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்துறைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அவை, 61 துறைகளில், 31 மாநிலங்களில் பரவி உள்ளன. விண்வெளித்துறையில் மட்டுமே 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த துறையில் முதலீடு, 2000-2014 ஆண்டுகளில் செய்யப்பட்டதைவிட 5 மடங்கு வளர்ந்துள்ளது. இனிவரும் காலத்தில் ராணுவம், விண்வெளி துறைகள் தற்சார்பு துறையில் முக்கிய தூண்களாக இருக்கப்போகின்றன.

2025-ம் ஆண்டுக்குள் நமது ராணுவ தளவாட உற்பத்தி இலக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.2 லட்சம் கோடி)அதிகமாக இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) விட அதிகமாக இருக்கும்.

உத்தரபிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு வழித்தடங்கள் இந்த துறையை மேலும் உயர்த்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story