பெங்களூருவுக்கு வந்த, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூருவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்ட நேற்று பெங்களூரு வந்தார். காலை 6 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் மக்கள் தேசிய கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் பிரதமர் மோடி ஏறி சில நிமிடங்கள் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
நீண்ட தூரமான இடத்தில் இருந்து வருகை தந்ததால் எந்த நேரத்திற்கு இங்கு வருவேன் என்று தெரியவில்லை. மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிவிட்டு உடனடியாக டெல்லி திரும்ப வேண்டி இருப்பதால், என்னை வரவேற்க வர வேண்டாம் என்று கவர்னர், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருக்கு கூறிவிட்டேன். ஆனால் முறைப்படி நான் கர்நாடகம் வரும்போது வரவேற்கும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறினேன். அவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அவா்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நீங்கள் அதிகாலையிலேயே இங்கு வந்துள்ளீர்கள். வெளிநாட்டில் இருந்ததால் நான் மிகுந்த ஆவலோடு இங்கு வர காத்திருந்தேன். தற்போது இங்கு நான் உரையாற்றுவது சரியாக இருக்காது. நான் விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன். இன்னும் நீங்கள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி மகிழ்ச்சியில் இருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்ற வரிசையில் ஜெய் விஞ்ஞான் என்ற முழக்கத்தையும் மோடி கூறினார். அவரை பின்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அந்த முழக்கத்தை கூறினர். அங்கு டொள்ளு குனிதா உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் பிறகு அவர் இஸ்ரோ மையத்துக்கு புறப்பட்டு சென்றார். காலை 7.15 மணிக்கு பீனியா இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மோடி, காலை 8.50-க்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வழியில் ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் பெங்களூரு எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், எஸ்.ஆர்.விஸ்வநாத், கிருஷ்ணப்பா, தாசரஹள்ளி முனிராஜ் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அவர்களை பார்த்ததும் பிரதமர் மோடி காரின் கதவை திறந்து காரில் இருந்தபடியே கையை அசைத்தார். அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து இஸ்ரோ மையத்திற்கு 24 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக பயணித்தார். இதனால் அவர் பயணித்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழிநெடுகிலும் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9.30 மணியளவில் அவர் தனி விமானம் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை கர்நாடக தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.