ராகுல் காந்தி வீட்டுக்கு போலீசை அனுப்பி தொந்தரவு கொடுக்கும் பிரதமர் மோடி
ராகுல் காந்தியின் வீட்டுக்கு பிரதமர் மோடி போலீசாரை அனுப்பி தொந்தரவு கொடுப்பதாக சித்தராமையா விமர்சித்துள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தொந்தரவு கொடுக்கிறார்.
ராகுல் காந்தியின் வீட்டிற்கு டெல்லி போலீசார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பா.ஜனதாவினர் பெண் பித்தர்கள். அவர்களுக்கு பெண்களை பாதுகாப்பவா்களை கண்டால் குற்றவாளிகளை போல் தெரிகிறது. காங்கிரசார் பெண்களை பாதுகாக்கும் பணியை செய்கிறார்கள். அதனால் ராகுல் காந்தியின் வீட்டிற்கு பிரதமர் மோடி போலீசாரை அனுப்பி தொந்தரவு கொடுக்கிறார்.
காஷ்மீரில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா?. அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இல்லையா?. குற்றவாளிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு புகார் சொன்னவர்களுக்கு இடையூறு செய்வது சரியா?. நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேச தொடங்கியதில் இருந்து அவருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.
பாலியல் புகார்கள்
பெண்களின் பாதுகாப்பில் பா.ஜனதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அக்கட்சியில் உள்ள தலைவர்கள் மீது நிலுவையில் உள்ள பாலியல் புகாா்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதாவின் பல தலைவர்கள் மீது பெண்கள் குறித்த புகார் உள்ளது. காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையின் வெற்றி மத்திய பா.ஜனதா அரசின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ராகுல் காந்தியின் போராட்டம் நிற்காது. நாட்டு மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.