வருகிற 12-ந்தேதி பிரதமர் மோடி உப்பள்ளி வருகை
பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி உப்பள்ளிக்கு வர உள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
பிரதமர் மோடி வருகை
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி மீண்டும் உப்பள்ளிக்கு வர உள்ளார். அன்றைய தினம் காலை மண்டியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதியம் 2 மணி அளிவில் தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு வருகிறார். தார்வாரில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் உப்பள்ளியில் நடக்கும் 'ரோடு ஷோ'வில் மோடி கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி வருகையால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி பலமடைந்து வருகிறது. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காங்கிரசாருக்கு பயம்
பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வருவதால் காங்கிரஸ் கட்சியினருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் லோக் அயுக்தா அமைப்பு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் லோக் அயுக்தாவை ரத்து செய்துவிட்டு சித்தராமையா ஊழல் தடுப்பு படைைய தொடங்கினார்.
ஆனால் ஊழல் தடுப்பு படைக்கு சுதந்திரமாக செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை. தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது லோக் அயுக்தா நடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜனதா ஆட்சியல் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. மாடால் விருபாக்ஷப்பா வழக்கில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.