குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு...2ஆம் கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்...!
50 கி.மீ வரை சாலை மார்கமாக திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஆமதாபாத்,
குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறை ஆம் ஆத்மி களத்திற்கு வரவும் மும்முனைப் போட்டியாகத் தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப் பதிவில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. காலையில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே போன்று மற்றொரு வாக்குச்சாவடியில் திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில் பிரவுல்பாய் மோரே என்ற இளைஞருக்கு மஹாராஷ்ராவில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் நடக்க வேண்டிய திருமணத்தை மாலை நேரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு குஜராத்தில், தபு நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமண உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்து வந்து வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மறக்காமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்துங்கள் எனக் கூறிவிட்டு திருமணத்திற்காக மகாராஷ்டிரா புறப்பட்டுச் சென்றார்.
குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில், இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 2ம் கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
திறந்த வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. அகமதாபாத்தில் பிரதமர் மோடி பேரணியாக செல்கிறார். மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார். 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செல்லும் வகையில், இந்த பேரணி அமைகிறது. பேரணியில் நடுவே அவரசரமாக வந்த ஆம்புலன்ஸ் வேனிற்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் வழி விட்டனர்.