ரூ.27,360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 14000 பள்ளிகளை ரூ.27360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.
ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 18.7 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.