அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அரசாணை வெளியீடு
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயண திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சக்தி ஸ்மார்ட் கார்டுகளை வினியோகம் செய்யப்படுகிறது.
பெங்களூரு:-
சக்தி திட்டம்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, இலவச மின்சாரம், அரசு பஸ்களில் இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். இதில் வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு பஸ்களில் மாணவிகள், பெண்கள் மாநிலம் முழுவதும் இலவச பயணம் செய்யலாம் என்று கடந்த 3-ந்தேதி சித்தராமையா அறிவித்தார்.
இந்த நிலையில் அரசு பஸ்களில் மாணவிகள், பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-
கர்நாடக அரசு, சக்தி திட்டத்தை வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும். அரசு பஸ்களில் கர்நாடக மாநிலத்திற்குள் மட்டுமே இலவசமாக பயணித்துக் கொள்ளலாம். வெளி மாநிலங்களுக்கும் செல்லும் பஸ்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
ஸ்மார்ட் கார்டுகள்
அதே நேரத்தில் சொகுசு பஸ்களான ராஜஹம்சா, ஏ.சி. இல்லாத படுக்கை பஸ்கள், வஜ்ரா, வாயு வஜ்ரா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்டு கிளாஸ், அம்பாரி, அம்பாரி டிரிம் கிளாஸ், அம்பாரி உத்சவ், பிளை பஸ், மின்சார பவர் பிளஸ் ஆகிய பஸ்களில் இந்த திட்டம் பொருந்தாது. இதில் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) தவிர மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். கர்நாடக அரசின் சேவா சிந்து இணையதளத்தில் பயனாளிகளிடம் விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு சக்தி ஸ்மார்ட் கார்டுகளை வினியோகிக்க வேண்டும்.
இந்த கார்டுகளை வழங்கும் பணிகளை அடுத்த 3 மாதங்களில் போக்குவரத்து கழகங்கள் செய்து முடிக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் கார்டுகளை வினியோகிக்கும் வரை பெண்களை பஸ்களில் மத்திய-மாநில அரசுகளின் அடையாள அட்டைகள், அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மற்றும் வசிப்பிட முகவரி அடையாள ஆவணங்களை காட்டினால் பஸ்களில் இலவசமாக பயணிக்க போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுமதிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.