பெங்களூருவில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி மவுன போராட்டம்
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து பெங்களூருவில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி மவுன போராட்டத்தை நடத்தியது.
பெங்களூரு:
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து பெங்களூருவில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி மவுன போராட்டத்தை நடத்தியது.
மவுன போராட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் 40 சதவீத கமிஷன், ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் பா.ஜனதா அரசின் 'ஊழலுக்கு முடிவு கட்டுங்கள், பெங்களூருவை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் மவுன போராட்டம் பெங்களூருவில் நேற்று நூதன முறையில் நடத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் என மொத்தம் 300 இடங்களில் இந்த மவுன போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்காங்கே கூடிய காங்கிரஸ் தொண்டர்கள், கைகளில் பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்த வாசகத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
வளர்ச்சி பணிகள்
பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து காங்கிரஸ் இந்த மவுன போராட்டத்தை நடத்துகிறது. இந்த போராட்டம் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி தலைமையில் நடைபெற்றது. பெங்களூருவில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இது குழிகளின் தலைநகரமாக மாறிவிட்டது. 40 சதவீத கமிஷன் காரணமாக வளர்ச்சி பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
தோல்வி அடைந்துவிட்டது
இந்த சாலை குழிகளால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதற்கெல்லாம் பதில் யார் கூறுவார்கள்?. இந்த பா.ஜனதா கட்சி பெங்களூரு உள்பட கர்நாடக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும்.
நாங்கள் மக்களின் குரலாக பணியாற்றும் நோக்கத்தில் மக்கள் குரல் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். பெங்களூருவில் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து மட்டும் ரூ.1 கோடி மாமூலாக வசூலிக்கிறார்கள். அந்த அளவுக்கு மிக மோசமான அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நாங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்
பதிலளிக்கவில்லை
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. மக்களின் வருவாய் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதுகுறித்து எத்தகைய பகிரங்க விவாதத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதா அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.