குடகில் ஈசுவரப்பாவை கண்டித்து போராட்டம்
மசூதி ஒலிபெருக்கி குறித்து சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவை கண்டித்து குடகில் போராட்டம் நடந்தது.
குடகு, மார்ச்.19-
சர்ச்சை கருத்து
மசூதியில் உள்ள ஒலிபெருக்கியால் தொந்தரவு ஏற்படுவதாக முன்னாள் முந்திரி ஈசுவரப்பா பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈசுவரப்பாவின் இந்த கருத்திற்குள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்த முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கரியப்பா சர்க்கிளில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கையில் பேனர்களுடன் நின்ற அவர்கள், ஆங்காங்கே ஈசுவரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளையும் ஒட்டினர். அதில் முஸ்லிம் சமுதாயத்தை இழிவாக பேசிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதையடுத்து கரியப்பா சர்க்கிளில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அங்கு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது தாசில்தாரை சந்தித்து ஈசுவரப்பா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தனர். அந்த மனுவை வாங்கிய தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.