பெங்களூரு - சென்னை 6 வழிச்சாலை அமைக்க நிலம் கொடுத்த நிலையில் நிவாரண தொகை வழங்காததால் விவசாயிகள் சாலை மறியல்
பெங்களூரு - சென்னை இடையே 6 வழிச்சாலை அமைக்க நிலம் வழங்கிய நிலையில் நிவாரண தொகை வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோலார் தங்கவயல்:
பெங்களூரு - சென்னை இடையே 6 வழிச்சாலை அமைக்க நிலம் வழங்கிய நிலையில் நிவாரண தொகை வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்தப்பட்டது
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி வழியாகவும், கோலார், சித்தூர், வேலூர் வழியாகவும் என 2 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலார், பேத்தமங்களா, வி.கோட்டா வழியாக சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோலாரில் இருந்து முல்பாகல் வழியக சென்னை வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக, மத்திய பொதுப்பணித்துறை விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.
விவசாயிகள் சாலை மறியல்
ஆனால் நிலங்களை கையகப்படுத்தி பல மாதங்கள் ஆகியும் அதற்கான நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள கர்நாடகா-ஆந்திரா எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறினர்.
போக்குவரத்து...
பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து அங்கு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.