விடுதி மாணவிகளின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கசிவு - போராட்டம்


விடுதி மாணவிகளின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கசிவு - போராட்டம்
x

சண்டிகரில் விடுதி மாணவிகளின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் தனது சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடியோ கசிவு காரணமாக பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக சமூக ஊடகப் பதிவு வெளியாகி இருப்பதை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன. மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி தெரிவித்துள்ளார்.

"இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க விட மாட்டோம் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதியளிக்கிறேன் என பஞ்சாப் பள்ளிக் கல்வி துறை மந்திரி ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் கூறியுள்ளார். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story