'ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' - பிரியங்கா காந்தி


ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி
x

ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் வெற்றி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது சகோரரர் ராகுல் காந்தி குறித்து 'எக்ஸ்' தளத்தில் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"யார் உங்களை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீங்கள் ஒருபோதும் பின்வாங்கவே இல்லை. உங்கள் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும் நீங்கள் நம்பிக்கையை விடவில்லை. அவர்கள் பொய் பிரசாரம் செய்தாலும், நீங்கள் சத்தியத்திற்காக போராடுவதை நிறுத்தவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெறுப்பை பரிசளித்தாலும் கூட, கோபமோ அல்லது வெறுப்புணர்வோ உங்களை வெல்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை.

உங்கள் இதயத்தில் அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் நீங்கள் போராடினீர்கள். உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள், இப்போது பார்க்கிறார்கள். ஆனால் எங்களில் சிலர் எப்போதும் உங்களைப் பார்த்து, நீங்கள் எல்லாவற்றிலும் துணிச்சலானவர் என்று அறிந்திருக்கிறோம். ராகுல் காந்தி பாய், உங்கள் சகோதரியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.




Next Story