கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடக்கம்


கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 28 Jan 2023 2:25 AM IST (Updated: 28 Jan 2023 2:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அறிவியல் கண்காட்சி

கா்நாடக உண்டு உறைவிட பள்ளிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு, அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கிறது. கட்டிடங்கள், சுற்றுச்சுவர் கட்ட அதிகம் செலவு செய்கிறோம். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவசியம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தரமான கல்வி

ஒரு உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்படுகிறது. அவ்வளவு செலவு செய்தாலும், குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது இல்லை. இது முந்தைய அரசுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை. குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

உண்டு உறைவிட பள்ளிகள் சேர்ந்து அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களின் கல்வி நிலையை பெரிய அளவில் மேம்படுத்தி கொண்டுள்ளனர்.

கூடுதல் மதிப்பெண்கள்

போட்டி தேர்வுகளில் இந்த மாணவர்கள் பிறரை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை விலகி தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இந்த உண்டு உறைவிட பள்ளிகளை மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் குழந்தைகளின் நலனை அரசு கவனித்து கொள்கிறது.

அவா்களுக்கு நல்ல தரமான கல்வி வழங்கி அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொடுத்தால், அதன் மூலம் கர்நாடகம் மேலும் வளர்ச்சி அடையும். எந்த பள்ளிகளுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது என்பதை கூறினால் அதற்கு உரிய நிதியை வழங்க அரசு தயாராக உள்ளது. 10 ஆண்டுகளை கடந்த உண்டு உறைவிட பள்ளிகளில் பி.யூ.சி வகுப்புகள் தொடங்கப்படும்.

போட்டி தோ்வுகள்

இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். அறிவியலை கற்பதே கடினம் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அறிவியலை, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story