புதுச்சேரி மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியீடு
தேசிய தேர்வு முகமை மூலம் நடப்பாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17-ந் தேதி நடந்தது.
புதுச்சேரி,
தேசிய தேர்வு முகமை மூலம் நடப்பாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17-ந் தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில் 17.64 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
புதுவையில் 8 மையங்களில் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து 5,511 பேர் தேர்வு எழுதினார்கள். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
புதுவையில் நீட் தேர்வு எழுதிய 2,899 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்ட தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை பெற்றது.
இதையடுத்து புதுச்சேரி மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் தர வரிசை பட்டியல் சுகாதார துறை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் மாணவர் குருதேவநாதன் 720-க்கு 675 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 1,249-வது இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். மாணவர் கிருஷ்ணா கார்த்திக் 670 மதிப்பெண் பெற்று புதுவை அளவில் 2-வது இடத்தையும், ஆயுஷ் யாதவ் 665 மதிப்பெண் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.