பஞ்சாப்: காலிஸ்தானி தலைவர் தப்பியோட்டம், ஆதரவாளர்கள் 78 பேர் கைது; மதியம் வரை இணையதளம் முடக்கம்


பஞ்சாப்:  காலிஸ்தானி தலைவர் தப்பியோட்டம், ஆதரவாளர்கள் 78 பேர் கைது; மதியம் வரை இணையதளம் முடக்கம்
x
தினத்தந்தி 19 March 2023 9:02 AM IST (Updated: 19 March 2023 9:35 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி, ஆயுதங்களுடன் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங் தனிப்படை போலீசாரிடம் சிக்காமல் தப்பி உள்ளார்.

அமிர்தசரஸ்,



பஞ்சாப்பில் நடிகர் தீப் சித்து என்பவரால் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை தற்போது, அம்ரித்பால் சிங் என்பவர் நடத்தி வருகிறார். நடிகர் தீப் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.

கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான, கடத்தல் குற்றவாளியான லவ்பிரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தபோது பரபரப்பு ஏற்பட்டது. அவரை விடுவிக்க கோரி போராட்டம் நடந்தது.

அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் காணப்பட்டனர்.

அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதன்பின்னர், அம்ரித்பாலின் முக்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை விடுவிப்போம் என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த வன்முறைக்கு பஞ்சாப் போலீசாரே காரணம் என பின்னர் அம்ரித்பால் குற்றச்சாட்டாக கூறினார். இந்த வன்முறையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என்ற விவரங்களை கூட போலீசார் வெளியிடவில்லை.

எனினும், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது என பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி பகவந்த் மான் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கூறினார். இதன்பின், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்ரித்பாலின் நிதி தொடர்பான விசயங்களை கவனித்து கொள்ளும் தல்ஜீத் சிங் கால்சி என்பவர் அரியானாவின் குர்காவன் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு அம்ரித்பாலை கைது செய்ய தீவிரப்படுத்தப்பட்டது. இறுதியில் பாதுகாப்பு வாகனங்களுடன் ஜலந்தரின் ஷாகோட் பகுதியை நோக்கி சென்றும், கடைசியாக மோட்டார் சைக்கிளில் தப்பியும் அம்ரித்பால் சென்றார். எனினும், போலீசில் அவர் சிக்காத நிலையில், தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டார்.

எனினும், வன்முறை பரவி விடாமல் தவிர்க்க இன்று மதியம் 12 மணிவரை பஞ்சாப்பில் இணையதள வசதி முடக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அம்ரித்பாலின் உதவியாளர்கள் ஷாகோட் பகுதிக்கு திரண்டு வரும்படி அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இதேபோன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் அம்ரித்பாலின் ஜல்லுப்பூர் கைரா கிராமத்தில் போலீசார், துணை ராணுவ படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டும் உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story