பஞ்சாப்; தாதா ஜர்னைல் சிங் முகமூடி நபர்களால் சுட்டு கொலை; பரபரப்பு சி.சி.டி.வி. காட்சி வெளியீடு
பஞ்சாப்பில் தாதா ஜர்னைல் சிங்கை முகமூடி அணிந்து வந்த நபர்கள் அதிரடியாக 25-க்கும் மேற்பட்ட முறை சுட்டு கொலை செய்து உள்ளனர்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் சதியாலா கிராமத்தில் இருந்த தாதா ஜர்னைல் சிங்கை, முகமூடி அணிந்து வந்த 4 நபர்கள் திடீரென மறித்து, அதிரடியாக சுட்டு கொன்றனர்.
அவர்கள், 20 முதல் 25 முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்து உள்ளார். சம்பவம் பற்றி அறிந்து மூத்த காவல் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். பிரபல கோபி கம்சாம்பூரியா கும்பலை சேர்ந்த ஜர்னைல் சிங் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வெளியே இருந்து உள்ளார்.
இந்நிலையில், அவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்தபோதும், போலீசார் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
ஜர்னைலுக்கு எதிராக கொலை முயற்சி உள்பட 4 எப்.ஐ.ஆர். பதிவுகள் உள்ளன என்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என அமிர்தசரஸ் ஊரக எஸ்.பி. சதீந்தர் சிங் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்றும் கூறியுள்ளார். இதுபற்றிய பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.