பஞ்சாபை டெல்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது: ராகுல் காந்தி தாக்கு
பஞ்சாபை டெல்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது என்று பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சண்டிகர்,
பஞ்சாபில் காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தும் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பகவந்த் மான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
முன்னதாக கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 122வது நாளாக பஞ்சாபில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சோசியார்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ""பஞ்சாப் மாநிலத்தை டெல்லியில் இருந்து இயக்கக்கூடாது. பஞ்சாபை மாநிலத்திலிருந்து அரசு இயக்க வேண்டும். முதல்-மந்திரி பகவந்த மானுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்தான் பஞ்சாபில் முதல்-மந்திரி, டெல்லி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்படக் கூடாது. பகவந்த் மான் கண்டிப்பாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.
இது வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்... மாநிலத்தின் மரியாதைக்குரிய விஷயம். நீங்கள் இங்கு சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும். நீங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைக் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் ஒருவரின் ரிமோட் கண்ட்ரோலாக இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.