"தூய்மை இந்தியா; கண்ணியத்துடன் வாழ வாய்ப்பு வழங்குகிறது" - பிரதமர் மோடி
மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியால் இந்தியா முன்னேறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஐகானிக் வாரம்' கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய நாணயங்களின் தொகுப்பையும் வெளியிட்டார்.
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய நடவடிக்கைகளை எடுத்து புதிய பணிகளை செய்ய முயற்சித்துள்ளது என்றும் தூய்மை இந்தியா திட்டம் ஏழைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சி அரசை மையமாக கொண்டு செயல்பட்டதாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, தற்போது மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியில் இந்தியா முன்னேறியுள்ளது என்றும் கூறினார். மேலும் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதையே நாங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு கூறினார்.