வினாத்தாள் கசிவு விவகாரம்; வேலை இல்லாத இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யப்படும்: ஐ.டி. மந்திரி ராமராவ்
தெலுங்கானாவில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சுய லாபங்களுக்காக அரசியல் செய்ய வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ஐ.டி. மந்திரி ராமராவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பெரும் போராட்டம் வெடித்து உள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே இளநிலை பொறியியலாளர் மற்றும் நகர திட்டம் சார்ந்த வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தென்மேற்கு மண்டல டி.சி.பி. கிரண் பிரபாகர் கூறும்போது, தெலுங்கானா அரசு தேர்வாணைய உதவி செயலாளர் (நிர்வாகம்) அளித்த புகாரின் அடிப்படையில் பேகம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. உதவி பொறியியலாளர் வினாத்தாள் கசிவு மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்து உள்ளனர் என கூறினார்.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கில் பிரவீன் குமார் (வயது 32) முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு உள்ளார். இதுதவிர, ராஜசேகர் (வயது 35), ரேணுகா (வயது 35), தகநாயகே (வயது 38), கே. ராஜேஷ்வர் (வயது 33), கே. நிலேஷ் நாயக் (வயது 28), பி. கோபால் நாயக் (வயது 29), கே. ஸ்ரீனிவாஸ் (வயது 30) மற்றும் ராஜேந்திர நாயக் (வயது 31) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அனைவரும் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய புள்ளிகளான பிரவீன் மற்றும் ராஜசேகரிடம் இருந்து வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
லேப்டாப்புகள், கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு நடந்த, குரூப்-1 தேர்வின் முதல்நிலை தேர்விலும் இதுபோன்று வினாத்தாள்கள் கசிந்தனவா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில், பிரவீனின் செல்போனில் பல இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் வினாத்தாள் கசியப்பட்ட விவரங்களை ஒப்பு கொண்டார். ஆனால், யாரேனும் உதவி செய்தனரா? என்பது பற்றிய விவரங்களை விசாரணையில் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் அரசுக்கு எதிராக பா.ஜ.க.வும் போராட்டம் நடத்தி வருகிறது.
இதுபற்றி தெலுங்கானா தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை மந்திரி கே.டி. ராமராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, உண்மை என்னவென்று தெரியாமல் அரசுக்கு எதிராக தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
தெலுங்கானா அரசு தேர்வாணையம் அரசியல் சாசனப்படி செயல்பட கூடியது. அதில் மாநில அரசின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும். இது தெரியாமல் பா.ஜ.க. தலைவர் பண்டி பேசியிருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது என கூறியுள்ளார்.
ஒட்டு மொத்த தெலுங்கானா அரசு தேர்வாணையத்திற்கு, தனிநபர் ஒருவர் செய்த தவறை, இணைத்து கூறி வேலையில்லாத இளைஞர்களிடம் வன்முறையை தூண்ட பா.ஜ.க முயற்சிக்கிறது.
இளைஞர்களிடம், அவர்களது வேலைகளை விட்டு விட்டு, தேர்வுக்கு தயாராகாமல் அதனை நிறுத்தி விட்டு பா.ஜ.க. பிரசாரத்திற்கு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தது பண்டி சஞ்சய் என நினைவுப்படுத்திய ராமராவ், பிரதமர் மோடியின் குஜராத்தில் 8 ஆண்டுகளில் 13 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்து உள்ளன.
அதற்காக பிரதமர் மோடியை பதவி விலக கூறும் தைரியம் பண்டிக்கு இருக்கின்றதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் விரைவாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அரசு அமைத்தது. அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டனர் என்றும் ராமராவ் கூறியுள்ளார். வேலையில்லாத இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.