தன்னை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரம்:உரிமையாளர் என நினைத்து பாதசாரி மீது தாக்குதல்


தன்னை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரம்:உரிமையாளர் என நினைத்து பாதசாரி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தன்னை பார்த்து நாய் குரைத்ததால், அதன் உரிமையாளர் என நினைத்து பாதசாரியை கத்தியால் தாக்கிய கூலி தொழிலாளியை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

கத்தியால் தாக்கி...

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியா. இவர் மல்லேசுவரம் 7-வது கிராசில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு எதிரே நடைபாதையில் நாய் ஒன்று நின்றது. அந்த நாய் பாலசுப்பிரமணியாவை பார்த்து தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக கூலி தொழிலாளி ஒருவர் நடந்து வந்தார். அவரை பார்த்தும் நாய் தொடர்ந்து குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி அங்கு நின்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியா தான் நாயின் உரிமையாளர் என நினைத்துள்ளார்.

இதையடுத்து தொழிலாளி, பாலசுப்பிரமணியாவிடம் நாய் குரைத்ததை கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது தொழிலாளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பாலசுப்பிரமணியாவை குத்தினார்.

இதில் பாலசுப்ரமணியாவுக்கு கை உள்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பாலசுப்ரமணியாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மல்லேசுவரம் போலீசில் பாலசுப்பிரமணியா புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தான் பாலசுப்பிரமணியாவை தாக்கியதும், கூலி தொழிலாளியான அவர் வேலையை முடித்துவிட்டு நடந்து சென்றபோது நாய் குரைத்ததால் ஆத்திரத்தில் தாக்கியது தெரிந்தது. இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story