நாட்டில் ஜனநாயகம் இருப்பதனால் தான் ராகுல் காந்தியால் மோடிஜிக்கு எதிராக அதிகம் பேச முடிகிறது: மத்திய மந்திரி மேக்வால்
நாட்டில் ஜனநாயகம் இருப்பதனால் தான் ராகுல் காந்தியால் மோடிஜிக்கு எதிராக அதிகம் பேச முடிகிறது என மத்திய மந்திரி மேக்வால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது என கூறினார்.
இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த சூழலில், கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களையும் நடத்தி வருகிறது. வயநாடு தொகுதியில் இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாட்டில் ஜனநாயகம் இருப்பதனால் தான் ராகுல் காந்தியால் பேச முடிகிறது. மோடிஜிக்கு எதிராக அதிகம் பேசிய நபர் அவர் ஒருவர் மட்டுமே. அதன் பின்னரும், அவரது குரல் முடக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறி வருகிறார் என்று கூறியுள்ளார்.